2 ஆண்டுகளுக்கு பிறகு திருவண்ணாமலை கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக பார்க்கப்படுவது திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் திருத்தலம். அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி தரும் என்பது சைவர்களின் நம்பிக்கை. திருவண்ணாமலை மலையை பௌர்ணமி நாளன்று பக்தர்கள் சுற்றி வருவர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பின் திருவண்ணாமலை கோயிலில் கிரிவலத்திற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்.
பக்தர்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் ஆகியவற்றை கடைபிடித்து பாதுகாப்புடன் கிரிவலம் செல்ல வேண்டும் என ஆட்சியர் முருகேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக திருவண்ணாமலைகலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக பவுர்ணமி தினங்களில் கிரிவலம் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை அரசால் நீக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து இந்தமாதம் (பங்குனி)பவுர்ணமி தினங்களான வருகிற 17 மற்றும் 18- ஆம் தேதிகளில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.கிரிவலம் செல்ல வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கட்டாயம் முடக்கவும் அணிந்து வரவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.